Jan 12, 2011

தம்மாம் கா.ந.மன்றத்தின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி! மாணவ-மாணவியர் பெருந்திரளாகப் பங்கேற்பு!!

“சிறகுகளை விரியுங்கள்!” என்ற தலைப்பில், சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொள்ளும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில், 16.10.2010 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.



சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் அப்துல் காதிர் வாஃபிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் செய்யித் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.ஆர்.தாஹா மன்றத்தின் சேவைகள் குறித்து சுருக்கவுரையாற்றினார்.



அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுஸைன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் எஸ்.ஆப்தீன், “சிறகுகளை விரியுங்கள்” என்ற தலைப்பில், அசைபட உருப்பெருக்கி துணையுடன் மாணவ-மாணவியருக்கான கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.





இந்நிகழ்ச்சி நடைபெறுவது பற்றிய அறிவிப்புகள் அடங்கிய பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்த சில கேள்விகளுக்கு சிறந்த கருத்துக்களைத் தந்தவர்களின் கருத்துப் பதிவுகள் தனியே பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றுள் மாணவர்கள் புறத்திலிருந்து 5 கருத்துக்களும், பெண்கள் மாணவியர் புறத்திலிருந்து 5 கருத்துக்களும் பரிசுக்குரியனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள், ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா, ஐ.ஐ.எம். பைத்துல்மால் பொருளாளர் ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ், இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், முஹம்மத் ஃபாஸில் உள்ளிட்டோரால் வழங்கப்பட்டன.





சிறப்பு விருந்தினருக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நினைவுப பரிசு வழங்கப்பட்டது. ஹாஜி அஹ்மத் ஹுஸைன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனரும், இக்ராஃ கல்விச் சங்கத்தின் துணைச் செயலாளருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.

இந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமா, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன் ஆகியோரும், அனைத்துப்பள்ளிகளின் ஆசிரியர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.



















நிகழ்ச்சி ஏற்பாடுகளை, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அஹ்மத் ஹுஸைன், செய்யித் முஹம்மத் புகாரீ, செய்யித் ஹஸன், ஹம்ஸா இஸ்மாயீல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment